செவ்வாய், 8 செப்டம்பர், 2020

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த இ-மெயில் நிஜமா?

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்கலைக்கழகங்கள் கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர அனைத்து அரியர் தேர்வுகளையும் முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார். இந்நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.ஐ.சி.டி.இ நிர்வாகம் அண்ணா பல்கலைக்கழத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் வெளியாகி உள்ளது. சிலர், ஏ.ஐ.சி.டி.இ அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் பொய்யானது என்றும் கூறப்படுகிறது. அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.ஐ.சி.டி.இ நிஜமாகவே மின்னஞ்சல் அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த 6 மாத காலமாக உலகையே முடக்கி வைத்துள்ளது. ஓரிரு மாதங்களாகத்தான் பல நாடுகள் மீண்டும் அந்த முடக்கத்திலிருந்து விடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் இறுதி ஆண்டு பருவத் தேர்வைத் தவிர மற்ற அனைத்து அரியர்ஸ் தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசு அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

இதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஏ.ஐ.சி.டி.இ தமிழக அரசுக்கு எந்த மின்னஞ்சலையும் அனுப்பவில்லை. அப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா வெளியிட வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்த நிலையில், தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்து அறிவித்ததை எதிர்த்து ஏ.ஐ.சி.டி.இ அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் வெளியானதாக கூறப்படுகிறது.

ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே பெயரில் ஆகஸ்ட் 30ம் தேதி அனுப்பியதாக வெளியான மின்னஞ்சலில், “பல்வேறு பாடங்களில் இறுதி ஆண்டு பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள் முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்த பாடங்களை தேர்வு நடத்தாமல் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்களுக்கு எந்த தேர்வுகளையும் நடத்தாமல் மதிப்பெண் அளித்து பட்டமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய மாணவர்கள் தொழில் நிறுவனங்களிலும் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களிலும் ஒப்புதல் அளிக்கமாட்டாது. இதனை மீறினால், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்  என்று ஏ.ஐ.சி.டி.இ வலியுறுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மின்னஞ்சலும் பொய்யானது என்று சிலர் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தரப்பில் இருந்து ஏ.ஐ.சி.டி.இ மின்னஞ்சல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

source: https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-arrears-students-passed-cannot-accept-aicte-chairman-letter-to-vice-chancellor-219975/

Related Posts: