இந்திய படைகள், எல்லையில், சீன சூழ்ச்சிகளை முறியடித்து, தென்கரையில் பாங்கோங் த்சோ மற்றும் ரெசாங் லா அருகே ரெச்சின் லா ஆகிய இடங்களளை, இந்தியா தன்வசம் ஆக்கியிருந்த நிலையில், செப்டம்பர் 7ம் தேதி, இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு, இந்திய ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சீன ராணுவத்தின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் சாங் ஷூலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவ ராணுவ வீரர்களை நோக்கி இந்தியப் படையினர் எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்ட பின்பு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீன எல்லை பாதுகாப்பு படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர்.
இந்தியப் படையினர் சட்டவிரோதமாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து வந்தது இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள ஒப்பந்தங்களை கடுமையாக மீறும் செயல்; இது அப்பிராந்தியத்தில் பதற்றநிலை தூண்டுவதுடன், தவறான புரிதல்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். எல்லைப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் இந்திய ராணுவம் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுசுல் செக்டர் பகுதி, பாங்கோங் சோ மற்றும் ரெசின் லா பகுதிகளுக்கு இடைய அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வெற்றிடங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, சீனா எவ்வகையிலும் இந்திய பகுதிகளில் உள்நுழைய முடியாத நிலையை, இந்திய ராணுவம், சமீபத்தில் தான் மேற்கொண்டிருந்தது.
எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் நிலவிவரும் அசாதாரண சூழலை தணிக்கும் பொருட்டு, செப்டம்பர் 4ம் தேதி லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ராணுவ தளபதி ஜெனரல் நாராவனே, அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். எல்லைப்பகுதியில், அண்டை நாடுகள் வாலாட்டினால், அவர்களுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்று அப்போது நாராவனே எச்சரித்திருந்தார்.
எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சீனா இறங்கிவரும் என்று நினைத்திருந்த வேளையில், இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்துள்ள புதிய குற்றச்சாட்டால், அமைதி பேச்சுவார்த்தை முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
source: https://tamil.indianexpress.com/india/india-border-issue-china-lac-faceoff-india-china-border-dispute-india-china-border-219966/#