
சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 3வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மெகா ரைடு நேற்று முன்தினம் தொடங்கியது. 187 இடங்களில் 1800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்றிரவு வரை 50 இடங்களில் சோதனை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி, ஜெயா டி.வியின் தலைமை செயல் அதிகாரியும் சசிகலாவின் சகோதரர் மகனுமான விவேக் ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அபிராமபுரம், பீமன் முதலி தெருவிலுள்ள தொழிலதிபர் சிவக்குமார் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான பந்தய சாலையில் உள்ள வீடு மற்றும் ராம் நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்றிரவுடன் சோதனை நிறைவடைந்தது. அங்கு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஆறுமுகசாமிக்கு சொந்தமான அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சோதனை தொடர்கிறது. தொழிலதிபர் சன்ஜீவனுக்கு சொந்தமான ஆர்.எஸ்.புரம் மற்றும் போத்தனூர் அலுவலகங்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. ஆனால், போத்தனூரில் உள்ள இல்லத்தில் சோதனை தொடர்கிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கல்லூரியில் 2-வது நாளாக நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை நேற்றிரவு 9 மணியளவில் நிறைவடைந்தது. ஆனால், செங்கமலத்தாயார் கல்லூரியில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் சசிகலாவின் கணவர் நடராஜன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் உள்ளிட்ட 7 பேரின் வீடுகளில் நடைபெற்ற சோதனை நேற்றிரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வருமானவரித் துறை அதிகாரிகள், சோதனை விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். சோதனை விவரங்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும் என்று கூறினர். இதனிடையே, டிடிவி தினகரனின் ஆதரவாளரும், தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான ராஜேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் முடிந்தது. இந்த சோதனை எதற்காக நடைபெற்றது என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கலில் 6 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் செந்திலின் தங்கை லாவண்யாவின் லாக்கரில் இருந்து 2 பைகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. வழக்கறிஞர் செந்திலின் ஜூனியரான பாண்டியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பாண்டியனின் மனைவி சங்கீதாவிடம் இருந்து 90 சவரன் நகை மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், TNPSC உறுப்பினரான வழக்கறிஞர் ஏ.வி.பாலுசாமி வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவரது மனைவி மணிமேகலையிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் செந்திலுடன் இணைந்து தொழில் செய்து வரும் சுப்பிரமணியம் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும், செந்திலின் நண்பர் பிரகாஷ் அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போல், தினகரனின் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வனின் உதவியாளர், ராஜகோபால் என்பவரின் மகன் கனகராஜின் கம்பம் வீட்டில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் 2 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
புதுச்சேரியில், லஷ்மி ஜுவல்லர்ஸில் நேற்று முன்தினம் காலை முதல் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அங்கிருந்த கணினியில் இருந்து ஹார்ட் டிஸ்க்கை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்றும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.