செவ்வாய், 3 ஏப்ரல், 2018

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பலரும், சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். 

இந்நிலையில், 53 சதவீத தீக்காயங்களோடு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆவார். 

இத்துடன் குரங்கனி தீ விபத்து பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த குரங்கணி சிறப்பு தீ விபத்து சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. 

தற்போது, மதுரையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மினு ஜார்ஜ் என்பவர் 35 சதவிகித தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்.