வெள்ளி, 3 ஜூலை, 2020

மியான்மரில் சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு!

மியான்மர் நாட்டில் உள்ள பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

மியான்மர் நாட்டின் கச்சின் மாகாணத்தில் உள்ள ஹபகாந்த் பகுதியில் பச்சை மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பலத்த மழை பெய்துள்ளது. ஆனால் அந்த மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மண் சரிந்து சுரங்கத்திற்குள் விழுந்ததில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் பலர் மண்ணில் புதைந்தனர்.

 இதனை அடுத்து அங்குவந்த தீயணைப்புப்படையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 


இந்த விபத்தில் உயிரிழந்த 162 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் இருக்கும் சுரங்கங்களில் அடிக்கடி இதுபோன்று நிலச்சரிவு ஏற்படும் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளனர்.