சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் துணிச்சலாக மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சாட்சி சொன்ன தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கின் போது கூடுதலாக செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் படு காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவத்தில் விசாரணை நடத்திய மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன்னிலையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் ரேவதி சாட்சியளித்தார். மேலும் இவ்வாறு சாட்சியளிப்பதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தேவை எனவும் முறையிட்டார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பலர் துணிச்சலாக சாட்சியளித்த ரேவதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.