மகாராஷ்டிர மாநிலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பர்பானி மாவட்டம் ஜின்தூரில் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக சுரேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சுனில் ஷிதல்கர் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களுக்கும் சில காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களில், சில காவல் அதிகாரிகளின் செல்போன் நம்பர்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் இருந்தன. மேலும் இது தொடர்பாக பதிவான இரண்டு வழக்குகளில் 5 காவலர்களுக்கு குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததும், அவர்களின் வங்கி கணக்கிற்கு குற்றவாளிகளால் குறிப்பிடத்தக்க அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஹனுமந்த் கச்சவேவ் என்பவர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பர்பானி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகாந்த் உபாத்யாய் தெரிவித்துள்ளார். மேலும் காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினர் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகாந்த் உபாத்யாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.