அலிகார் பகுதியில் வசித்து வருபவர் சுல்தான். சுல்தான் கானுக்கு அளவுக்கு அதிகமாக வயிற்று வலி இருந்த காரணத்தால் குவார்ஸி பகுதியில் அமைந்திருக்கும் தோர்ரா பை-பாஸ் சாலை அருகே அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதால் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த ஊழியர்கள் அல்ட்ரா – சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரிடம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனுக்காக ரூ. 4000 கேட்கப்பட்டுள்ளது.
சுல்தான் கானின் உறவினர்களால் அந்த பணத்தை தர முடியாத நிலை ஏற்பட்டவுடன் அங்கிருந்து செல்வதாக கூறியுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் எண்ட்ரி ஃபீஸ் ரூ. 4000 தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் முடியாது என்று மறுத்துள்ளனர். ஆனால் மருந்துகளுக்கு அவர்கள் பணம் செலுத்திவிட்டனர். மருந்திற்காக அவர்களிடம் ரூ. 3700 வசூலிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படாமல் சுல்தானை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தனர். அப்போது அங்கிருக்கும் மருத்துவமனை ஊழியர் சுல்தானை தாக்கியுள்ளார். மரக்கட்டையால் வைத்து தாக்கியதால் சுல்தானின் தலையில் காயம் பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் அங்கு வந்து சுல்தானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.