மேடையே வாழ்வென்று சுற்றி வந்தவர்களில் முக்கியமானவர், நாஞ்சில் சம்பத். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து விலகிய பிறகு, ‘இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே பிரவேசிப்பேன்’ என சூழுரைத்தார்.
ஆனாலும் அரசியல் மேடை, அவரை விடவில்லை. அதிகாரபூர்வமாக திமுக.வில் இணையாமலேயே திமுக கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அதற்கும், கொரோனா தடை போட்டு வைத்திருக்கிறது.
பேசிய வாயும், மேடையேறிய கால்களும் எப்படி சும்மா இருக்கின்றன? சொந்த ஊரான, குமரி மாவட்டம் மணக்காவிளையில் முகாமிட்டிருக்கும் சம்பத்திடம் ‘ஐஇ தமிழ்’-க்காக பேசினோம்.
‘என்னுடைய கிராமம், ரொம்ப அழகான கிராமம். தமிழ் நாட்டிலேயே அழகான கிராமம் என்றால் என் கிராமம்னு சொல்லலாம். மேடான பகுதியில் வீடு, வீட்டுக்கு கீழே ஆறு, ஆற்றுக்கு கீழே குளம், அப்படியொரு எழிலார்ந்த பகுதி. மகள், பேரன், சம்பந்தி, மருமகன் என சுற்றத்தார் இருக்கிறார்கள்.
காலையில் எழுந்ததும் கொஞ்சம் நடை பயிற்சி, பிறகு கபசுரக் குடிநீர். தொடர்ந்து செய்தித் தாளை வாசிக்கிறேன். என்னுடைய பேரன்கள் மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் என்னோடு இருக்கிறார்கள். அவர்களை கொண்டாடுவதில் கிடைக்கும் இன்பம் உலகில் கோடி கிடைத்தாலும் கிடைக்காது.
அதுபோல உணவு முறையில் தலைகீழ் மாற்றம். இன்று காலையில் உளுந்தம் கஞ்சிதான் உணவு. அதன்பிறகு 11 மணிக்கு எல்லாக் காய்கறிகளையும் போட்டு ஒரு சாலட். கொஞ்சம் வெந்நீர் சாப்பிட்டுவிட்டு இருக்கிறேன். என்னுடைய 285 (இலக்கியப்) பேச்சுகள் இருக்கிறது. அதை தட்டச்சு செய்ய ஒரு பையனை அழைத்திருக்கிறேன். ஒரு புத்தகமாக மாற்றும் ஆசை இருக்கிறது.
மகன் எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு, எம்.டி இடம் கிடைச்சிருக்கு. எம்.டி மெடிசின் படிக்கப் போறான். அதுக்காக ரூபாய் திரட்டும் முயற்சி ஒருபக்கம் நடக்கு. மகனுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பு இந்தக் கொரோனா காலத்தில் கிடைச்சிருக்கு. இதுவும் பயனுள்ள நாட்களாத்தான் இருக்கு.
வருவாய்க்கான வாசல்தான் பூட்டியிருக்கே தவிர, வேற ஒண்ணும் குறையிருப்பதா நான் நினைக்கல. சாம்பாதிக்கிறதுதான் வாழ்க்கை என நான் நினைக்கல. சாதிக்கிறதுதான் வாழ்க்கை என நினைச்சேன். இந்தக் கொரோனா காலத்திலும் சாதிக்கிறேன்.
எப்போதும் புத்தகங்களை படித்திருக்கிறேன்; வாசித்திருக்கிறேன். தேவைக்காக என்னை தயார் செய்துகொண்டு மேடைக்கு போவேன். ஆனால் அதில் ஆழ்ந்தும் அனுபவித்தும் படிக்கும் சூழல் எனக்கு இப்போது வாய்த்திருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஒவ்வொரு பாசுரமாக படித்துக் கொண்டிருக்கிறேன். சங்க இலக்கியத்தில் கலி படிக்கிறேன். பதிற்றுப் பத்தை இப்போதுதான் படிக்கிறேன்.
தந்தைப் பெரியார் படைப்புகளை எல்லாம் திராவிடர் கழக அலுவலகத்தில் இருந்தும் ஆனைமுத்து ஐயாவிடம் இருந்தும் வாங்கினேன். அதை முழுவதுமாக வாசித்தேனா என்றால் இல்லை. இப்போது முழுவதுமாக வாசித்த பிறகு எனக்கு மிகப்பெரிய தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
அதைப்போல அறிஞர் அண்ணாவின் படைப்புகளை தமிழ்மண் பதிப்பகம் தலைநகர் சென்னையில் வெளியிட்டது. அந்த 64 புத்தகங்களை இப்போதுதான் ஒழுங்காக படிக்கிறேன். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் குமரிக் கண்டம், திராவிட நாடு போன்ற புத்தகங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். ஆனால் அவை எவ்வளவு முக்கியமான புத்தகங்கள் என்பதை இப்போது வாசித்த பிறகுதான் உணர்கிறேன்.
க.ப.அறவாணன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். அவர் தமிழின் நீதி நூல்கள் அனைத்தையும் தொகுத்து அற இலக்கியம் என ஒரு புத்தகம் போட்டிருக்கிறார். எல்லாமே அதுல இருக்கு. ஏ டு இசட் என்பார்களே, அதுபோல! அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறிப்புகூட எடுக்கவில்லை. அனுபவித்து படிக்கிறேன். தமிழ் கலாச்சாரம் எவ்வளவு தொன்மையானது, தமிழ் மொழி எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த வாசிப்பு எனக்கு உணர்த்தியிருக்கிறது.
உலக நாடுகளில் தமிழர்கள் என்கிற தலைப்பில் கனடா தமிழ்ச் சங்கத்திற்கு ஸூம்-ல் ஒரு மணி நேரம் பேசினேன். பாரிஸ் தமிழ் சங்கத்திற்காகவும் பேசினேன். சில ஊடகங்களுக்காகவும் பேசுகிறேன்.
கொரோனா காலம் முடிந்த பிறகு மேடைகளில் இன்னும் ஆளுமையுடன் பேசுகிற ஆற்றலுடன் வருவேன் என நம்புகிறேன். ஏனோதானோ என்று பேசாமல் மிகுந்த ஆளுமையுடன் பேச என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நடந்து கொண்டிருக்கிற மோடி சர்க்காரின் கொடூரமான பாசிச நடவடிக்கைகள், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்புகள், மோடி என்கிற வித்தைக்காரரின் வித்தைகள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அரசியல் மேடையாக இருந்தாலும் இலக்கிய மேடையாக இருந்தாலும் என்னுடைய பேச்சில் இனி மெருகும் அழகும் ஒரு அழுத்தமும் இருக்கும்.
என் பேரனுக்கு மாக்சிம் கார்கி பெயரை வச்சேன். மாக்சிம் கார்கி படைப்புகளில் தாய் மட்டும்தான் படிச்சேன். மீதமுள்ள படைப்புகளை இப்போ படிச்சேன். அதே மாதிரி லியோ டால்ஸ்டாயின், ‘போரும் சமாதானமும்’ இப்போது படித்தேன். நேருவின் படைப்புகளை முழுமையா படிக்கிறேன். காரணம், நேருவை திட்டமிட்டு இந்த சர்க்கார் மறைக்கிறது.
டெல்லியில் தொடங்குகிற கொரோனா மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் வச்சிருக்காங்க. படேல், நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தவரை தூக்குவதும், அந்தக் காங்கிரஸ் கட்சிக்கு விலை மதிக்க முடியாத ஈகம் செய்த மகத்தான தலைவர் நேருவை காயப்படுத்துவதும் இவர்களுக்கு பிள்ளை விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர்கள் செய்த தியாகங்களை, குணசேகரன் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அதில் கே.பி.சுந்தரம்பாளில் இருந்து தில்லையாடி வள்ளியம்மை வரை வருகிறது. கே.பி.சுந்தரம்மாள், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரை முழுமையாக படிக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது.
மேடைகளில் பேசாமல் இருப்பது பெரிய சிரமம்தான். அதேசமயம் இனி மேடையே இருக்குமா? என்கிற சந்தேகமும் இருக்கிறது. 6 மாதம் பழகியாச்சு. இப்படித்தான் இருக்கும் என்றால், அதற்கேற்ப பழகிக்க வேண்டியதுதான். மேடையில் பேசுறப்போ கூட்டம் அதை உள்வாங்குவது, அவங்க ரீயாக்ட் பண்ணி, அதிலிருந்து நாம் ஒரு ஃபோர்ஸ் கிரியேட் பண்ணி பேசுவது என்பது மிக அற்புதமான உணர்வு. மேடையில் பேசினால் விளைவை உருவாக்க வேண்டும் என்பார்கள். அதை ஒவ்வொரு மேடையிலும் செய்து வந்திருக்கிறேன்.
இன்று திராவிட இயக்கத்தின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. திமுக.வில் அதிகாரபூர்வமாகவே இணையும் முடிவில்தான் இருந்தேன். அதற்குள் கொரோனா வந்துவிட்டது. கொரோனா முடியட்டும் என காத்திருக்கிறேன். திமுக.வில் அதிகாரபூர்வமாகவே இணைந்து மேடைகளில் பேசுவேன்.’ என முடித்தார் நாஞ்சில் சம்பத்.
பின் குறிப்பு: கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நாஞ்சில் சம்பத். அப்போது திமுக கரை வேஷ்டியை சம்பத்திடம் கொடுத்த உதயநிதி, ‘என் முடிவை கூறிவிட்டேன். இந்த வேஷ்டியை அணிவதும், அணியாததும் சம்பத் அண்ணனின் விருப்பம்’ என குறிப்பிட்டார். புன்னகைத்தபடி வேஷ்டியை பெற்றுக்கொண்ட சம்பத், அப்போது எதுவும் கூறவில்லை. முதல் முறையாக திமுக.வில் அதிகாரபூர்வமாக இணையவிருப்பதாக இந்தப் பேட்டியில் சம்பத் கூறியிருக்கிறார்.