கொரோனா நோயாளியின் சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் பெற்ற நிலையில் நோயாளி உயிரிழந்த பின்பும் உடலைக் கொடுக்க ரூ.4 லட்சம் தனியார் மருத்துவமனை கேட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ரூ.7 லட்சம் கட்டிய நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தவரின் உடலை பெற மேலும் ரூ.4 லட்சம் கட்ட வேண்டும் என்று அந்த தனியார் மருத்துவமனை உறவினர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ. 25 ஆயிரம் மட்டும் மருத்துவமனைக்கு கட்டி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்
இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஊரக சுகாதாரத் துறை இயக்குனர், திருநெல்வேலி சுகாதார இணை இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறது.