கொரோனா பாதிப்பால் மாநில அரசுகளின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத்தொகையை வழங்காமல், நிதிநிலையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 மாநில முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ,தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கும், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜிஎஸ்டி (GST) இழப்பீட்டுச் சட்டத்தில் சட்டரீதியான ஆணை இருந்தபோதிலும், ஜிஎஸ்டி இழப்பீட்டுச் சட்டத்தை ஏப்ரல் மாதத்திலிருந்து மத்திய அரசு தாமதப்படுத்தியது. மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு சுமார் 3 லட்சம் கோடியில் இருந்து 1.65 லட்சம் கோடியாக குறைத்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியதாவது, நாங்கள் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது எங்கள் தரப்பிலிருந்தும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். மத்திய அரசு முழு இழப்பீட்டு தொகையையும் கடனாக வழங்க வேண்டும். இந்த கடனை திருப்பிச்செலுத்த நீண்டகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மத்திய அரசு கடன் வாங்குவது என்பது மிக எளிதான காரியம். வட்டிவிகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று மத்திய அரசு பின்வாங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் இந்த நடைமுறையை தான் பின்பற்றி வருகின்றன.
மத்திய அரசு விதித்துள்ள கோரிக்கைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இதுகுறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்குவதில் கொரோனாவை காரணம் காட்டி எந்த மாநிலங்களுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய அரசு மேற்கொள்வது சட்டவிரோதம் ஆகும். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளோம். இது ஜனநாயக உரிமை. மாநில நலனுக்காக எவ்வித மாநில அரசும் தங்களது உரிமையை விட்டுக்கொடுக்காது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த 4 மாநிலங்கள் மட்டுமல்லாது, பஞ்சாப், மேற்குவங்கம், கேரளா, டெல்லி, சட்டீஸ்ர், தெலுங்கானா, ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள GST இழப்பீடு மற்றும் நிலுவைத் தொகையை குறைப்பதற்கான மத்திய அரசின் முடிவுகளுக்கு வலுவான விதிவிலக்கு அளித்து, மாநிலங்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும். செஸ் வசூலில் இருந்து கடன்களை உயர்த்தி கடனை – அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் வழங்க வேண்டும். 2020-21 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருவாயின் இடைவெளியை அடைய 10% வளர்ச்சியைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒருதலைப்பட்ச முடிவு குறித்து மாநிலங்களும் கவலை கொண்டுள்ளன.
கொரோனா சூழ்நிலையில், மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, மாநிலங்களின் சட்டபூர்வமான உரிமை கோரல்களை மறுக்கிறது. நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரைத்ததை அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா பரவலால் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று அதை மாநிலங்களுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும்., செஸ் வரி வழங்கும் காலத்தை 2022-க்கு பின்னரும் நீட்டிக்க வேண்டும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ளஜிஎஸ்டி வரி சட்டத்தில், மாநிலங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்போது அந்த இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியையும் மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏப்ரல் 1 முதல் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. தமிழகத்திற்கு 12250.50 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுகிறேன் என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்
சென்ற ஜூலை மாத இறுதியில் 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,302 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கப்பட்டது. சென்ற நிதியாண்டுக்கான இழப்பீட்டுத் தொகை தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது. 12 சதவீதம் சரிவடைந்து ரூ.86,449 கோடிகளாக உள்ளது. மாநிலங்களுக்கு அளித்துள்ள உத்தரவாதத்தின்படி 14 சதவீதம் எனில் ரூ .63,800 கோடி அவர்களுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி சட்டத்தில், மாநிலங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்போது அந்த இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியையும் மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பது 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட உத்தரவாதம் என்பது குறிப்பிடத்தக்கது.