செவ்வாய், 1 செப்டம்பர், 2020

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் உயிரிழந்தார்

 முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

பிரணாப் முகர்ஜி 1935-ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங், ஆகியோர் பிரதமராக இருந்தபோது, அமைச்சராக பணியாற்றினார். திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் பணியாற்ரிஉள்ளார். வெளியுறவுத்துறை பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகிய முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். இதையடுத்து, அவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.

நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், பிரணாப் முகர்ஜிக்கும் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருந்து 2019ம் ஆண்டு அளிக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜிக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

பிரணாப் முகர்ஜியின் மரணம் குறித்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் குறிப்பிடுகையில், “ஆர்.ஆர். மருத்துமனை மருத்துவர்கள் மிகவும் சிறப்பாக சிகிச்சை அளித்த போதிலும் இந்தியா முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்தபோதிலும் எனது தந்தை பிரணாப் முகர்ஜி, காலமானார் என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.