இந்திய பொருளாதாரம் பற்றி பேசுவோம்’எனும் வீடியோ தொடரின், முதலாவது வீடியோவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, கொரோனா பொது முடக்கநிலை போன்ற மோடி அரசின் நடவடிக்கை நாட்டின் 90% க்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய முறைசாரா அமைப்பினை சீரழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
2008 உலகளாவிய மந்தநிலையைப் பற்றி குறிப்பிட்ட ராகுல் காந்தி, “2008-ல் இந்த உலகையே பொருளாதார மந்தநிலைக்கு உள்ளாக்கின .அமெரிக்கா ,ஜப்பான் ,சீனா உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகையே பாதித்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வங்கிகள், பெருநிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தன. ஆனால், இந்தியாவில் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தனது வீடியோவில் “அப்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. பொருளாதார மந்தநிலை காரணமாக வளமான பொருளாதார நாடுகள் சவாலை சந்தித்து வரும் வேளையில், இந்தியா ஏன் பாதிக்கப்படவில்லை என்று அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கிடம் நான் நேரடியாக கேட்டேன். அதற்கு அவர், இந்தியாவில் முறை சார்ந்த, முறை சாரா என இரண்டு விதமான பொருளாதார அமைப்பு உண்டு என்பதை எனக்கு விளக்கினர். பெரிய நிறுவனங்கள் மட்டுமே முறை சார்ந்த அமைப்பின் கீழ் அடங்கும் .விவசாயிகள் , தொழிலாளர்கள் ,சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்றவை உள்ளடக்கியது தான் முறைசாரா அமைப்பு. இந்தியாவின் முறை சாரா அமைப்பு வலுவான நிலையில் உள்ளவரை எந்த பொருளாதார தாக்கமும் நெருங்க முடியாது என்று மன்மோகன் சிங் தெரிவித்ததாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் இரண்டாவது வகையின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று கூறிய ராகுல்காந்தி, “ஆளும் பாஜக அரசு கடந்த 6 ஆண்டுகளாக முறைசாரா அமைப்புகளை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது” என்று தெரிவித்தார். அதற்கு உதாரணமாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொரோனா வைரஸ் ஊரடங்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
௧டைசி நிமிடத்தில் அவசரமாக மத்திய அரசு கொரோனா ஊரடங்கை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, முறைசாரா அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். முறைசாரா அமைப்புகள் அழிக்கப்பட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாகாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
“முறைசாரா அமைப்புகள் தான் 90% வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்றன. இது உடைந்தால் இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிமக்கள் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாம், இதை புரிந்துக் கொண்டு, ஒன்றிணைந்து போராட வேண்டும், ” என்று ராகுல் காந்தி தனது வீடியோவில் தெரிவித்தார்.