புதன், 2 செப்டம்பர், 2020

ஜிடிபி சரிவு முதல் கொரோனா பாதிப்புகள் வரை… மோடி உருவாக்கிய பேரழிவுகள்: ராகுல் காந்தி கண்டனம்

 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (ஏப்ரல், மே, ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 24% சரிவு, பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, மாநிலங்களுக்கான  ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் போன்ற அனைத்தும் ‘மோடி உருவாக்கிய பேரழிவுகள்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று  அபாயம் மற்றும் எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு சம்பவங்களுக்கு  மத்திய அரசு தீர்வு காணத் தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி உருவாக்கிய பேரழிவுகளின் கீழ் இந்தியா பின்னுக்கு தள்ளப்படுகிறது என்று கூறிய ராகுல் காந்தி தனது ட்வீட்டில் : 1. வரலாற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு -23.9%; 2. 45 ஆண்டுகளில் அதிகமான வேலையின்மை; 3. 12 கோடி வேலை இழப்பு; 4. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மத்திய அரசு செலுத்தவில்லை;  5. உலகளவில் தினமும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்;   6.  இந்திய நாட்டு எல்லையில் அண்டை நாடுகள் ஆக்கிரமிப்பு ஆகிய முக்கிய பிரச்சனைகளை பட்டியலிட்டார்.

 

 

2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ( ஏப்ரல்-ஜூன்) உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடுகளை  வெளியிட்டவுடன், ” மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 % சரிவை சந்தித்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி. இந்திய பொருளாதாரத்தின் அழிவு பணமதிப்பிழப்புடன் தொடங்கியது. அப்போதிலிருந்தே, அரசாங்கம் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ” என்று தெரிவித்தார்.

 

 

இந்திய பொருளாதாரம் 23.9 சதவீதம் சுருங்கியுள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்த நிபுணர்களின் ஒவ்வொரு எச்சரிக்கையையும் மோடி அரசு புறக்கணிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த, சரிவு 1996ம் ஆண்டில் முதன் முதலாக  காலாண்டு புள்ளிவிவரங்கள் வெளியிடத் தொடங்கியதிலிருந்து இது அதிகப்படியான சரிவாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.