இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் வந்த பாதுகாப்பு படையினர் சுட்டதில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு தலா நூறு கோடி ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து கோடி ரூபாயும் வழங்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகையை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் அரபிக் கடல்பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, “என்ரிகா லாக்ஸி” என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீஸ்பிங்கு, ஜெலஸ்டின் ஆகிய இரு மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கரையிலிருந்து 22 கடல் மைல் தூரத்தில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால், கடலோரக் காவல்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.
இச்சம்பவத்திற்கு காரணமான கப்பலின் மாலுமிகளான மேசிமிலியனோ லட்டோரே மற்றும் சல்வடோர் ஜிரோனி ஆகிய இருவரிடமும் கொச்சியில் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் இரு நாட்டுப் பிரச்சனை என்பதால், இது தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இத்தாலி அரசானது இந்தியாவில் கடல் எல்லை 21 கடல் மைல் தூரம் மட்டும் தான் எனவே இந்தியாவுக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது என்று கூறி சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது.
இந்திய அரசானது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவின் கடல் எல்லையானது இந்தியாவின் சிறப்பு பொருளாதார கடல் பகுதியான 200 கடல்மைல் வரை உள்ளது என்று வாதிட்டது. இந்த இரு வாதத்தையும் கேட்டறிந்த சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சிறப்பு பொருளாதார கடல் பகுதி 200 கடல் மைல் வரை உள்ளது என உறுதி செய்தது. மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியன் மூலம் இத்தாலி மாலுமிகள் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மீனவர்களின் உயிரிழப்பிற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற இந்தியாவிற்கு உரிமை உள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மாலுமிகளுக்கு தண்டனை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில் ஏற்கெனவே இதே போன்ற ஒரு சம்பவத்தில் உயிரிழந்த ஜப்பான் நாட்டு மீனவர்களுக்கு அமெரிக்கா தலா 90 கோடி ரூபாய் வழங்கியது.
அதைப்போல இத்தாலி கப்பல் படை வீரர்களின் தாக்குதலால் உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் தலா 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காயமடைந்த மீனவர்களின் குடும்பத்திற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் அருட்திரு சர்ச்சில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.