ஞாயிறு, 5 ஜூலை, 2020

உ.பியில் காவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொன்ற ரவுடியின் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிஎஸ்பி உட்பட காவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொலை செய்த பிரபல ரவுடியின் வீட்டை மாவட்ட நிர்வாகத்தினர் இன்று தரைமட்டமாக்கினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிக்ரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. அம்மாநிலத்தில் பிரபலமான ரவுடியாக அறியப்படும் விகாஸ் துபேயின் மீது அமைச்சரை கொலை செய்தது உட்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் விகாஸ் துபேயை பிடிப்பதற்காக நேற்று முந்தைய இரவில் டிஎஸ்பி தலைமையில் சுமார் 50 போலீசார்  பித்ரு கிராமத்திற்கு சென்றுள்ளனர். காவல்துறையினரின் வருகையை அறிந்திருந்த விகாஸ் துபே மற்றும் அவனின் கூட்டாளிகள் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். 3 பக்கத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் காவல்துறையினர் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி, 3 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டார். 

 

 

உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலைமறைவாக இருக்கும் விகாஸ் துபேயை பிடிக்க 25 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. விகாஸ் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50,000 சன்மானமாக வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு இழப்பீடாக குடும்பங்களுக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபேயின் வீட்டை மாவட்ட நிர்வாகத்தினர் இன்று ஜேசிபி இயந்திர உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கினர். விகாஸ் துபேயின் கார்களையும் அவர்கள் நொறுக்கியுள்ளனர்.

01

கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த வீட்டை சுற்றிலும் பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. சட்டவிரோத செயல்களை அரங்கேற்றும் அலுவலகமாகவே அந்த வீடு இருந்ததாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

விகாஸ் துபேயின் கிராமம் Chaubeypur காவல்நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளது. அந்த காவல்நிலைய அதிகாரியான வினய் திவாரிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என புகார் வந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எந்தவொரு காவலருக்கும் தொடர்பு இருப்பதாக அறிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எஸ்.பி கூறினார்.