இந்தியாவில் பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியுடன் இணைந்து, கொரோனா தொற்றிற்கு கோவாக்சின் எனும் தடுப்பூசி கண்டறிந்தது. ஜுலை மாதம் முதல் இந்த மருந்தை நாடு முழுவதும் மனிதர்களிடம் சோதிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)அனுமத வழங்கியது.
கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி மருந்தில் உள்நாட்டில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட முதல் அனுமதி இதுவாகும் என்று ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவனர் கிருஷ்ணா எல்லா (Dr.Krishna Ella) தெரிவித்தார் .
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கான சோதனை நடைமுறைகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மருந்தை, பொதுப்பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனைகள் முடிக்கிவிட வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவ் கடிதம் எழுதியிருந்தார்.
யார் இந்த கிருஷ்ணா எல்லா?
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி நகராட்சி அருகே அமைந்துள்ள நெமிலி எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பட்டப்படிப்பை முடித்ததும் விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தவர். பின்னர், குடுமப பொருளாதார சூழல் காரணமாக ‘பேயர்’ எனும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விவாசாயத் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ரோட்டரி ‘Freedom From Hunger’ எனும் உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர், ஹைதராபாத் நகரில் தன்னிடம் உள்ள மருத்துவ சாதனங்கள் கொண்டு ஒரு சிறிய ஆய்வகத்தை தொடங்கினார். இது தான் பிந்தைய நாளில் ‘ பாரத் பயோடெக்’ எனும் நிறுவனமாக மாறியது. இந்தியாவில் ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டில் மாபெரும் திருப்புமுனையை இந்த நிறுவனம் கொண்டுவந்தது. உலகளவில் ஜிகா வைரஸுக்கான தடுப்பூசி மருந்தை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் வழங்கும் மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தில் பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது என்றும் கருதப்படுகிறது.
இந்த நிறுவனம் தான் தற்போது செயலிழக்கப்பட்ட ரேபீஸ் கிருமி அடிப்படையில் கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிபத்தது என்பதும் குறிப்பிடத்கக்கது.