ஞாயிறு, 5 ஜூலை, 2020

சீனா ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியா புதிய யுக்தி: அந்தமான் தீவு பகுதியில் ராணுவ தளம் அமைக்க திட்டம்!


இந்திய பெருக்கடல் பகுதியில் தனது இருப்பை சீனா விரிவாக்கம் செய்து வரும் சூழலில், அந்தமான் தீவு பகுதியில் ராணுவ உள்கட்டைமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

லடாக்கில் சீன ராணுவத்துடனான மோதலுக்குப் பின் அந்தமான் தீவு பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா இறங்கி உள்ளது. பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் கோகாசா, பாஸ் ஆகிய இடங்களில், கடற்படை விமான தளங்களில் உள்ள ஓடு பாதையை 10 ஆயிரம் அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நில ஒதுக்கீடும், அனுமதியும் தற்போது உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் 10 ஆண்டுகளில் ராணுவ தளம் அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கமோர்த்தா தீவில் 10 ஆயிரம் அடி நீள ஓடுபாதையுடன் கூடிய விமான தளம் அமைப்பதும் இதில் அடங்குகிறது. 

இத்திட்டம் 2027-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கூடுதல் விமானங்கள், போர்க்கப்பல்கள் ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடுதல் எண்ணிக்கையில் படைவீரர்களையும் அங்கு தங்க வைக்க முடியும். மேலும், இத்திட்டத்தால் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா தனது மேலாண்மையை நிறுவ முடியும் என்றும், இது சீனாவின் நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் என்றும் சொல்லப்டுகிறது.