சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமிழர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த வழக்கை அரசை விட, நீதிமன்றம் சரியாக கையாண்டிருப்பதாகக் கூறினார்.வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை என்று வைகோ குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.