சீனாவின் பெயரை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவும் சீனாவும் நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, படைகளைக் குவித்து வருகின்றன. இவற்றை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் செல்ல இருந்தார். திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் லடாக்கிற்கு சென்றதோ பிரதமர் நரேந்திர மோடி. அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றார். லேவில் உள்ள நிம்முவில் ராணுவ முகாம்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி, ராணுவம், விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடி உற்சாக மூட்டினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அஞ்சுகிறார் என சொல்லமாட்டேன் என்றும், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? என்றும் அவர் வினவி உள்ளார்.