Credit ns7.tv
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொள்வது தொடர்பான மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ரமணா தலையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில், சுற்றுச்சூழல் துறையில் இருந்து அனுமதி கிடைக்கும் வரை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கைப் பொறுத்தவரை, மத்திய அரசு தாக்கல் செய்த மனு மற்றும் ஆவணங்களில் சில தவறுகள் இருப்பதாகவும் அதனை சரிசெய்த பிறகு மனுவை தாக்கல் செய்யுமாறும் கூறப்பட்டது.
அப்போது எட்டு வழிச்சாலைக்காக நிலம் அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.