சென்னையில் கொரோனா பரவல் விகிதம் கட்டுக்குள் வந்ததாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு, மக்கள் தங்கள் பாதுகாப்பை கைவிட்டு விடலாம், என்பது அர்த்தமல்ல என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை நகரில் ஒரு காய்ச்சல் முகாமை பரிசோதித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நகரத்தில் 12,354 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 8.02 லட்சம் பேர் கலந்துக் கொண்டதாகவும் கூறினார். சென்னை பெருநகர மாநகராட்சியில் 1,979 குடிசை வாரிய குடியிருப்புகள் இருப்பதாகவும், ஒவ்வொரு 150 வீடுகளுக்கும் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 37,000 நபர்களை நாங்கள் அடையாளம் கண்டோம். 32,861 பேருக்கு ’ஸ்வாப் டெஸ்ட்’ செய்யப்பட்டது. எனவே காய்ச்சல் முகாம்கள் பயனுள்ளதாக இருந்தன. மக்களை தனிமைப்படுத்தவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முகாம்கள் உதவியது. அதன் செயல்பாடு தொடரும்” என்றார் ராதாகிருஷ்ணன்.
திங்கள்கிழமை முதல் அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் என்று சுகாதாரத் துறை கவலை கொண்டுள்ளது. குறைந்தது ஆறு அடி தூரத்தை கடைபிடிப்பது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தினார் டாக்டர் ராதாகிருஷ்ணன். பொது இடங்களில் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முகமூடி அணிவது ஆகியவற்றையும் தவறாமல் பின்பற்றும்படி கேட்டுக் கொண்ட அவர், கடைகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், காய்ச்சல் கிளினிக்குகளை நாடுமாறு மக்களை கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், நாங்கள் இதை விடாமுயற்சியுடன் கவனித்து வருகிறோம். அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால். “அதே அளவிலான முகாம்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடரும், ஆனால் எங்களுக்கு மக்களின் ஆதரவு தேவை” என்றும் குறிப்பிட்டார் ராதாகிருஷ்ணன்.
அடுத்த கட்டமாக மதுரையில் ரத்த மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருக்கும். அங்கு நாள்தோறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூருக்குச் சென்று அங்குள்ள சுகாதார அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.