திங்கள், 6 ஜூலை, 2020

கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடம் - ரஷ்யாவை விஞ்சிய இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா ஞாயிற்றுக்கிழமை அன்று 6,90,396 பாதிப்புகளுடன் ரஷ்யாவை விஞ்சி மூன்றாவது மிக மோசமான நாடாக திகழ்கிறது என்று Covid19india.org தகவலின்படி தெரியவருகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (JHU) டிராக்கர் கூற்றுப்படி, ரஷ்யா 6,80,283 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவை விட அதிகமாக பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே முறையே 2,841,124 மற்றும் 1,577,004 பாதிப்புகளுடன் உள்ளன.

எவ்வாறாயினும், டெல்லி, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதத்தை விட கோவிட் -19 மீட்பு வீதத்தை அதிகமாகக் கொண்டுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்தது. இந்திய அரசு மற்றும் அதன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கோவிட் நோயில் இருந்து குணப்படுத்தப்பட்டவர்களின் நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிய 24,850 கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது.

கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தியாவில் முதல் மாநிலமாக, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் மறு உத்தரவு வரும் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓராண்டு காலத்திற்கு மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. அரசு அனுமதி பெற்று மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் சமூக கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். அடுத்த ஓராண்டில் எந்த விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, ஊர்வலங்கள் உள்ளிட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு பங்கேற்க அனுமதி இல்லை. 50 பேரும் முககவசம் அணிய வேண்டும்.திருமண நிகழ்ச்சியில் ஆறு அடி இடைவெளி அவசியம். திருமண ஏற்பாட்டாளர்கள் சானிடைசர் அனைவருக்கும் வழங்க வேணடும்.

இறுதிச் சடங்குகளில், ஒரே நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் இருபது நபர்களைத் தாண்டக்கூடாது, அவர்கள் அனைவரும் முகம் கவசம் அணிந்து, சானிடிசரைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையில் முழு லாக் டவுன்

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டது.

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். வணிக நடவடிக்கைகள் எதுவும் இல்லை. காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகள்
கடைகள் பல பகுதிகளில் மூடப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாலைகளில் வாகன நடமாட்டம் இல்லை.

டெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தார். 10,000 படுக்கை வசதிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கோவிட் சிகிச்சை மையமாகும் இது.

ராதா சோமி சத் சங்கத்தில் இதனைத் திறந்து வைத்தார் அனில் பைஜல். டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்த கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் உள்ளது.

இதில் மிதமான மற்றும் கொரோனா நோய்க்குறிகுணங்கள் இல்லாத நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். முதலில் 1000 நோயாளிகள் இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.

நோய்க்குறி குணங்கள் இல்லை ஆனால் கொரோனா தொற்று உள்ள, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்களுக்கும் இந்த மையம் சிகிச்சை வழங்கவுள்ளது.

இந்த மையம் 1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்டது. சுமார் 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது. 200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு நிர்வாக ஆதரவு அளிக்கவுள்ளது, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் இந்த மையத்தை நடத்தும் முகமையாகும்.

கோவா கவுன்சிலர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணம்

கோவாவில் உள்ள மோர்முகாவோ நகராட்சி மன்றத்தின் 72 வயதான கவுன்சிலர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை COVID-19 காரணமாக இறந்தார் என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத கவுன்சிலர் பாஸ்கோலுக்கு, கடந்த மாதம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மார்கோவை தளமாகக் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.