செவ்வாய், 7 ஜூலை, 2020

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மோசடி; மனநலம் பாதித்தவருக்கு வரவேண்டிய பணம் கையாடல்!

Pradhan Mantri Awas Yojana என்ற திட்டம் 2015ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த ஸ்கீம் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பத்தூர், நெக்னாமலை, புருஷோத்தமன் குப்பம் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய மனைவி ஐயம்மாள் இதனால் மன நலம் பாதிக்கப்பட்டார். அவர்களுடைய மகன் ராகுல் காந்தி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர்கள் வாழ்ந்து வந்த வீடு முழுமையாக சேதம் அடைய, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று கூறி அவர்கள் இருவரிடம் இருந்தும் ஆதார் உட்பட அனைத்து அடையாள அட்டைகளின் நகல்களையும் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரையில் வீடு கட்ட யாரும் வர வில்லை.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் தரும் உணவை உண்டு  வாழும் அவர்கள் வெயில் காலத்தில் சாலையில் படுத்து தூங்குகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாது தவித்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு கட்டுவதாக கூறி நான்கு முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வஜ்ரவேல் தன்னுடைய உறவினர்களுக்கு அந்த பணத்தை மாற்றிவிட்டதாக பலரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.