புதன், 2 செப்டம்பர், 2020

வலதுசாரிகளின் முகநூல் பக்கங்களை ‘டெலிட்’ செய்தது ஏன்? ரவிசங்கர் பிரசாத் கடிதம்

 தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய் கிழமை பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பேஸ்புக் இந்தியா நிர்வாகம், 2019 தேர்தலுக்கு முன்னர் வலதுசாரி பக்கங்களை நீக்கியது மற்றும் “அவற்றின் ரீச்சை குறைத்தது” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ” உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசாங்க அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்”, “பக்கச்சார்பும் செயலற்ற தன்மையும் உங்கள் பேஸ்புக் இந்தியா அணியில் உள்ள தனிநபர்களின் அரசியல் நம்பிக்கைகளின் நேரடி விளைவாகும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் “சமீபத்தில் தரவுகளின் ஆதார அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்தி என்பது வேறொன்றுமில்லை. உங்கள் நிர்வாகத்தில் கருத்தியல் மேலாதிக்கத்திற்காக நடைபெறும் அதிகாரத்திற்கான போராட்டம். வேறெந்த தர்க்கங்களும், உங்கள் நிறுவனத்தில் இருந்து கசிந்த தேர்ந்தெடுக்க உண்மைகள் ஒரு மாற்று எதார்த்தத்தை உருவாக்க எவ்வாறு பரப்படுகிறது என்பதை நிரூபிக்க முடியாது. சர்வதேச ஊடகங்களுடன் பேஸ்புக் ஊழியர்களும் இணைந்து இந்த கூட்டு, மாபெரும் ஜனநாயகத்தின் ஜனநாயக முறைகள் மீது தீங்கு விளைக்கும் கருத்துகளை தங்களின் சொந்த சுயநலத்திற்காக வைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்தியாவில் 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பேஸ்புக் இந்தியா நிர்வாகம் வலது சாரிகள் சித்தாந்தத்தை ஆதரிக்கும் மக்களின் பக்கங்களை நீக்க அல்லது அவற்றின் வரம்பைக் கணிசமாகக் குறைப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த முயற்சி நடைபெற்றதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . பேஸ்புக் நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட டஜன் கணக்கான மின்னஞ்சல்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதும் எனக்கு தெரியும். மேற்கூறிய ஆவணப்படுத்தப்பட்ட சார்பு மற்றும் செயலற்ற தன்மை உங்கள் பேஸ்புக் இந்தியா குழுவில் உள்ள தனிநபர்களின் ஆதிக்க அரசியல் நம்பிக்கைகளின் நேரடி விளைவாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் கட்டுரை ஒன்று வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தற்போது இந்த கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில் பாஜகவுடன் தொடர்புடைய நான்கு நபர்கள் / பக்கங்களுக்கு “வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றவில்லை ” என்றும், அவர்களால் வன்முறை கலவரங்கள் ஏற்பட்டது என்றும் அதில் கூறப்பட்டது.

செவ்வாய் கிழமை அன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ், பாஜக ஐ.டி. செல்லின் தலைவர் அமித் மால்வியா முகநூல் நிர்வாகிகளுக்கும் கட்சிக்கு எதிராக செயல்படும் 44 பக்கங்களை நீக்க வேண்டும் என்றும், பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட (அழிக்கப்பட்ட) 17 பக்கங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் எழுதிய கடிதம் குறித்து செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியால், ஐ.டி. பாராளுமன்ற நிலைக்குழு ஃபேஸ்புக் இந்தியாவின் தலைவர் அஜித் மோகனை விசாரணைக்கு ஆஜர்ப்படுத்துவது தொடர்பாக விவாதங்களை உருவாக்கியது. அஜித் மோகன் நாளை நேரில் ஆஜராகிறார்.

இந்த சமூக தளத்தை தவறாக பயன்படுத்தியது, சார்புடன் செயல்பட்டது தொடர்பாக மார்க்கிற்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் உயர்மட்ட விசாரணை தேவை என்றும் கூறியுள்ளது. டெல்லி சட்டமன்றம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி தலைவரும் குழுத் தலைவருமான ராகவ் சாதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பேஸ்புக் இந்தியா கடந்த வாரம் இது ஒரு “பாகுபாடற்ற தளம்” என்றும், அதன் தரங்களை மீறி இந்தியாவில் பிரபலங்கள் வெளியிடும் உள்ளடக்கங்கள் தொடர்ந்து அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது. பிரசாத் தனது கடிதத்தில் இந்தியா-சமூக வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று கூறினார்,

அந்த கடிதத்தில் மேலும் “பேஸ்புக் ஊழியர்கள் பிரதமரையும், இந்திய அமைச்சரவை மூத்த அமைச்சர்களையும், பேஸ்புக் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டே, முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும் போதே தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்தியா நிர்வாக இயக்குநர் முதல் பிற மூத்த அதிகாரிகள் வரை பேஸ்புக் இந்தியா குழு ஒரு குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ”இந்த அரசியல் சித்தாங்களில் இருந்து வந்தவர்கள் அடுத்தடுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் இந்திய மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஜனநாயக நியாயத்தன்மையையும் இழந்த பின்னர், சமூக ஊடக தளங்களின் முடிவெடுக்கும் இடங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர் ” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.