
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய வகையில், 17 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, மீண்டும் எடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. நிறுவனங்கள் விவகாரத்துறைக்கான மத்திய அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில், இத்தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் நிறுவனங்கள், சுமார் 58 ஆயிரம் வங்கிக் கணக்குகளில், மொத்தம் 17 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி பின்னர் எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு போலி நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயல்பாட்டிற்கும் வருமானத்திற்கும் தொடர்பில்லாத வகையில் செயல்பட்ட பெயர் குறிப்பிடப்படாத ஒரு நிறுவனம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 2 ஆயிரத்து 484 கோடி ரூபாயை, வங்கிக் கணக்கில் செலுத்தி, பின்னர் எடுத்துள்ளது. மத்திய அரசின் அறிக்கை மூலம் இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது.
மேலும், நிதி மோசடியில் ஈடுபடுவதற்காகவே பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்ட புகாரில், இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் போலி நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோல், இத்தகைய நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்களில், சுமார் 3 லட்சம் பேரின் பதவிகளும், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.