வெள்ளி, 27 ஜூலை, 2018

கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...! July 27, 2018

Image


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை விசாரிக்க தலைவர்கள், தொண்டர்கள் கோபாலபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கருணாநிதியின் உடல் நலிவுற்று உள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை அளித்ததை அடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கோபாலபுரம் சென்று அவரது உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திமுக தொண்டர்களும் பெருமளவில் குவிந்துள்ளனர். இதனையடுத்து, கோபாலபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதற்காக பரங்கிமலை மற்றும் புதுப்பேட்டை ஆயுதப்படை முகாம்களிலிருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் 4 வது தெருவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதை அடைக்கப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரம் கிருஷ்ணன் கோயிலிலிருந்து டிஏவி பள்ளி செல்லும் சாலை ஒரு வழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் சென்னை காவிரி மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 பேர் கொண்ட மருத்துவக் குழு கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கருணாநிதிக்குத் தேவையான சிகிச்சைகள், அவரது இல்லத்திலேயே அளிக்கப்பட்டு வருகின்றன.  

கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக தொற்று உள்ளிட்டவற்றிற்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கருணாநிதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மு.க. அழகிரி, தனது குடும்பத்தினருடன் மதுரையில் இருந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் அறிவதற்காக பல்வேறு தலைவர்களும் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, டி. ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.