
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹14,356.84 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியை இந்தியா நாடியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் போலியான உத்தரவாத கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் அளித்து அதன் மூலம் ₹14,356.84 கோடி ரூபாயை மோசடி செய்த விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மோசடி விவகாரம் வெளியில் தெரிவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நீரவ் மோடி, அவரின் மனைவி ஏமி மோடி, சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவரின் மாமா மெகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்.
இதில் முக்கிய நபரான நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மெகுல் சோக்ஸி கரீபிய தீவு நாடான Antigua and Barbuda-வில் இருப்பதாக பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறையினர் மெகுல் சோக்ஸி நிலம், நீர், ஆகாயமார்க்கமாக எங்கும் தப்பிச் செல்லாதவாறு தடுக்குமாறு கேட்டுக்கொண்டது.
கடந்த ஆண்டே கரீபிய தீவு நாடான Antigua and Barbuda-வில் குடியுரிமை பெற்றுவிட்டதாக மெகுல் சோக்ஸி கடந்த வாரம் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து இந்திய அரசு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 132 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.