ஞாயிறு, 29 ஜூலை, 2018

பாகிஸ்தான் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் ஹஃபீஸ் சயீதின் கட்சி! July 29, 2018

Image

பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீது-வின் ஆதரவு பெற்ற கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல இயலாமல் அந்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி மொத்தமுள்ள 270 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் துணையோடு அக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே இத்தேர்தலில் ஜமாத்-உத்-தாவா எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சயீதின் ஆதரவுடன் Allah-o-Akbar Tehreek என்ற கட்சி போட்டியிட்டது. ஹஃபீஸ் சையதின் மகனான ஹஃபீஸ் தால்ஹா சயீது மற்றும் மருமகன் காலீத் வாலீத் ஆகியோர் உட்பட குடும்பத்தினர் சிலரும் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பயங்கரவாதி ஹஃபீஸ் சையதின் ஆதரவு பெற்று களமிறங்கிய Allah-o-Akbar Tehreek கட்சி மோசமான தோல்வியை சந்துத்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெல்ல குடியாத அக்கட்சி மொத்தமாகவே 1,71,441 ஓட்டுகளையே பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டுகளை கூட பெறத் தவறியுள்ளனர். ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே 45,000 வாக்குகள் பெற்றுள்ளார். அவரும் கூட வெற்றி இலக்கிலிருந்து மிகவும் பின் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர் தான் இந்த ஹஃபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-க்கு முன்பாக இம்ரான் கான் பிரதமர் பதவியை ஏற்பார் என தகவல்கள் கூறுகின்றன.