சனி, 28 ஜூலை, 2018

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல்: பாஜகவிற்கு எதிராக ஊழல் ஆயுதம்! July 28, 2018

Image

ரபேல் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது காங்கிரஸ் ஒரு நிறுவனம் தொடங்கி 12 நாட்களில் ரபேல் விமான ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என அந்த கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அவர்களுக்கு எதிராக பாஜகவினர் எடுத்த ஒற்றை ஆயுதம் ஊழல் அதே ஆயுதத்தை தற்போது கையிலெடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி ஆம், அமித்ஷா மகன் நிறுவனம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய லாபத்தை பெற்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக அமித்ஷா தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது என பாஜகவை நோக்கி குற்றச்சாட்டுகளை வீசி கொண்டிருக்கிறது காங்கிரஸ். இதற்கெல்லாம் உச்சமாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை கையிலெடுத்துள்ளது காங்கிரஸ்.

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது காங்கிரஸ். 

ரபேல் விவகாரம் சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு வேண்டியவர்கள் பலனடைந்துள்ளனர் என நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

பிரதமரின் கட்டளையின் பேரில் நிர்மலா சீத்தாராமன் பொய் கூறுகிறார் என ராகுல் கூற நாடாளுமன்றத்தில் பூகம்பமே வெடித்தது. அதன் பின்னர் ராகுல் குற்றச்சாட்டை நிர்மலா சீத்தாராமன் ஆதாரங்களுடன் மறுத்தாலும் அந்த சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை.

மோடி ஏழைகளுக்காக உழைக்கவில்லை மாறாக தனக்கு வேண்டிய ஒருசில பெருமுதலாளிகளுக்காக உழைக்கிறார் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே ரபேல் விவகாரத்தை கையாள்கிறது காங்கிரஸ் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. 

ரபேல் விவகாரத்தில் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களின் விதிமுறைகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறப்பட்ட நிலையிலும் கூட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தணிக்கை செய்துள்ளது.

தொடரும் ரபேல் சர்ச்சைக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.


source:
http://ns7.tv/ta/tamil-news/india/28/7/2018/rafael-corrupt-weapon-against-bjp