புதன், 18 ஜூலை, 2018

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி..! July 18, 2018

உடல் பரிசோதனைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

95 வயது ஆகும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் முதுமையின் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாகவும் தனது கோபாலபுரம் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவரது இல்லத்திலேயே சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 2016 டிசம்பர் மாதம் அவர் சுவாசிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் டிரைக்யோஸ்டோமி சிகிச்சையானது வழங்கப்பட்டது. தொண்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் காரணமாக அவர் அதன் வழியாக எளிதாக சுவாசிக்கவும் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளும் வகையிலும் இருந்தது. 

இதனை அடுத்து கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்ட சிறுகுழாய் மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் மாற்றுவதற்கும், அதனை அகற்றினால் அவரால் எளிதாக சுவாசிக்க முடிகிறதா என்பதை பரிசோதிப்பதுடன், அவருக்கு வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்தும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் கருணாநிதியுடன் உள்ளனர். பரிசோதனை முடிந்ததும், இன்றே கருணாநிதி வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Image