செவ்வாய், 31 ஜூலை, 2018

முணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குழுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்! July 31, 2018

Image

மலைவாசஸ்தலமான மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்திருக்கும் மூணார், சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. 

‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைக்கப்படும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள மூணாரில் வருடந்தோரும் இதமான சீதோஷன நிலை நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

நீலக்குறிஞ்சி:

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி எனப்படும் நீலக்குறிஞ்சி மலர்கள் மூணார் மலைப் பகுதியில் பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

பச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணார் தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தப் பூக்கள் பூத்துள்ளன. இந்த அரிய காட்சியை காண 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
 
3,000 ஹெக்டேர் பரப்பரளவில் பரந்து விரிந்துள்ள மூணார் மலைப்பகுதிக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் செல்லவது உகந்ததாகும்.  வரும் அக்டோபர் வரை குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் என கூறப்படுகிறது. 

குறிஞ்சி மலரின் சிறப்புத் தன்மை:

30 முதல் 60 செ.மி உயரம் கொண்ட குறிஞ்சி மலர் செடிகள் மலரத் தொடங்கிய பின்னர் இறந்து விடும் என்றும் அதில் இருந்து விழும் விதைகள் மீண்டும் முளைத்து செடியாகி அதில் இருந்து மலர்கள் பூக்க 12 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மூணாரில் மாட்டுப்பட்டி அணை, ரோஸ் கார்டன், கார்மேலகிரி யானை பூங்கா, குந்தலா அணை,  பொத்தமேடு வியூ பாயிண்ட், மறையூர் சந்தன காடுகள், லக்கன் நீர் வீழ்ச்சி, அட்டுக்கல், ராஜமலை, இரவிகுளம் தேசிய பூங்கா, தேவிகுளம், டாப் ஸ்டேஷன் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.