திங்கள், 23 ஜூலை, 2018

குழுவில் இருந்தவர் பகிர்ந்த தகவலால் 5 மாத காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் வாட்ஸ் அப் குரூப் அட்மின்! July 23, 2018



குழுவில் இருந்த நபர் அனுப்பிய ஆட்சேபிக்கத்தக்க வகையிலான தகவலால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ் அப் குரூப் அட்மின் ஒருவர் சிறை வாசம் அனுபவித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார்ஹ் மாவட்டத்தில் உள்ள தலேன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 14 அன்று நண்பர்கள் சிலர் இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் தேசிய விரோத மெசேஜ் ஒன்றை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அச்சிறுவன் பகிர்ந்த தகவலுக்கு கடும் எதிரிப்பு தெரிவித்த அந்த குரூப்பில் இருந்த சிலர் இது தொடர்பாக தலேக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அத்தகவலை பகிர்ந்த சிறுவன் மற்றும் அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மின் ராஜா குர்ஜார் ஆகியோருக்கு காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.

எனினும், குழுவின் அட்மினான குர்ஜார் உடனடியாக அந்த குரூப்பில் இருந்து தானாகவே வெளியேறினார் (Left), இதனைத் தொடர்ந்து குழுவில் இணைந்த கால மூப்பின் அடிப்படையில் வாட்ஸ் அப்பின் நெறிமுறையின்படி மேலும் இருவர் அந்த குரூப்பின் அட்மினாக தானாகவே ஆக்கப்பட்டனர். அவர்களும் அந்த குரூப்பில் இருந்து அவர்களாகவே வெளியேறினர்.

இறுதியாக ஜுனைத் மேவ் என்ற இளைஞர் அந்த குரூப்பின் அட்மினாக ஆக்கப்பட்டார். அவருக்கு வயது 23. அவர் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பட்டப்படித்து வந்ததுடன், பகுதிநேரமாக தொழில்நுட்ப பட்டயப் படிப்பும் படித்து வந்தார். 

பிப்ரவரி 14 அன்று ஆட்சேபிக்கத்தக்க வகையிலான தகவலை அனுப்பிய சிறுவன், குழுவின் அட்மின் ஜூனைத் மேவ் ஆகியோர் மீது தேசதுரோகம் (124A பிரிவு), வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள் (295A பிரிவு), எந்தவொரு வர்க்கத்தின் மத உணர்வுகளையும் சீர்குலைக்க நோக்கம் கொண்டது, தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
Image
மைனர் சிறுவன் என்பதால் அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், அட்மினான மேவ் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

5 மாதகாலமாக செய்யாத தவறுக்கு சிறைவாசம் அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மேவின் சகோதரர், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணையை காலதாமதம் செய்து வருவதால் தனது சகோதரன் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டிருப்பதால் உயர்நீதிமன்றம் வாயிலாக கூட மேவிற்கு பிணை வாங்க இயலவில்லை என்றும் அவரது சகோதரர் முகமது ஃபக்ருதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறையில் இருந்து வருவதால் தனது சகோதரனின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பருவத் தேர்வுகளை அவர் முழுவதும் தவறவிட்டுவிட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரியான மிஸ்ரா கூறும்போது, நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டார். காவல்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக எந்த புகாரும் கிடைக்கவில்லை என்றும், அப்படி கிடைக்கும்பட்சத்தில் இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்