
கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சூறை காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை பெய்த மழையின் போது, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா தலத்திற்கு செல்லக் கூடிய வழியில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதையடுத்து அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். கொடைக்கானல் ஏரி அமைந்திருக்கும் பகுதியிலும் பலத்த காற்று வீசுவதால், தமிழ்நாடு படகு குழாம் மற்றும் நகராட்சி படகு குழாமில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வார விடுமுறையை முன்னிட்டு, படகு சவாரி செய்யலாம் என்று ஆர்வமுடன் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்