சமூக ஊடகங்களோ, நிறுவனங்களோ தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்டத் தகவல்களை பாதுகாக்க தவறினால் குறைந்தபட்சம் 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தகவல் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு அமைத்த நீதிபதி B.N. ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான உயர்மட்டக் குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளது. இக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் நேற்று வழங்கியது.
அதில், கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெறும் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பிறருக்கு அளிப்பதோ, பாதுகாக்கத் தவறுவதோ குற்றம் என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் சூழலில், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஸ்ரீகிருஷ்ணா குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.