இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டித் தொடர் நடைபெற்று வந்தது. இதில் சீனா, மலேசியா, இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த 244 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதான லக்ஷயா சென், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தை சேர்ந்த Kunlavut Vitidsarn-யுடன் மல்லுக்கட்டினார்.
பரபரப்பான இப்போட்டியில் 21-19, 21-18 என்ற நேர் செட்கணக்கில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்..
இந்த வெற்றி இந்திய பேட்மிண்டன் துறைக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் 53 வருடங்களுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் இத் தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1965ஆம் ஆண்டு இந்திய வீரர் கவுதம் தக்கார் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றிருந்ததே இந்த வகையில் இத்தொடரில் இந்தியா வென்ற தங்கப்பதக்கமாக இருந்தது, இந்நிலையில் 53 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தொடரின் ஆண்கள் பிரிவில் லக்ஷயா சென் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டில் இதே தொடரில் லக்ஷயா சென் வெண்கலம் வென்றிருந்தார்.
இறுதிப் போட்டியில் நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றாலும், லக்ஷயா சென் தொடர் முழுவதும் அசாத்திய திறனை வெளிப்படுத்தியுள்ளார். இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் போட்டித் தரவரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் சீன வீரர் Li Shifeng மற்றும் அரையிறுதிப் போட்டியில் போட்டியில் போட்டித் தரவரிசையில் நான்காம் இடம் வகிக்கும் இந்தோனேசிய வீரர் Ikhsan Leonardo Imanuel Rumbay ஆகியோரை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார். இவர் உலக அளவில் 76 வது தரவரிசையில் உள்ளார்.
ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்களான கவுதம் தக்கார் ( தங்கம் - 1965) பிரனவ் சோப்ரா மற்றும் சாவந்த் ( வெண்கலம் - 2009), சமீர் வர்மா ( வெள்ளி, 2011), பி.வி.சிந்து (வெண்கலம் - 2011), சமீர் வர்மா ( வெண்கலம், 2012), பி.வி.சிந்து (தங்கம் - 2012) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.