செவ்வாய், 17 ஜூலை, 2018

நீட் தேர்வை தொடரும் சர்ச்சைகள்! July 17, 2018


நீட் தேர்வை அதிக சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போது நீட் தனித்தாள்களில் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மாணவர்களை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் சொல் ‘நீட்’ என்று சொல்லப்படும் நிலையில், இதன் தொடர் சர்ச்சைகள் தற்போது நீண்டுக்கொண்டே செல்கின்றன. தற்போதைய சர்ச்சை என்ன என்று பார்ப்பதற்கு முன், நீட் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்கள் பற்றி சில விஷயங்களை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

✦ மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

✦ ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் சுமார் 180 கேள்விகள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேட்கப்படுகின்றன. 

✦ நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வந்த சூழலில், ஆரம்பக்கட்டத்தில் சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கைகளின் மொத்த மதிப்பெண்கள் ஒரு புறம் இருந்தாலும், மாணவர்கள் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களையாவது எடுத்திருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

✦ தனித்தனி பாடங்களில் தேவையான மதிப்பெண்கள் குறித்த தகவல்கள், அடுத்தடுத்து சிபிஎஸ்இ-யிடம் இருந்து வந்த அறிக்கைகளில் தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில், 150 க்கும் குறைவான மதிப்புகள் எடுத்து தேர்ச்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் அவர்களது இயற்பியல், வேதியல், உயிரியல் தனித்தாள்களில் வெரும் நெகட்டிவ் அல்லது ஜீரோ அல்லது ஒற்றை எண் மதிப்பெண்கள் எடுத்தவர்களாக இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 110 மாணவர்கள் நெகட்டிவ் மற்றும் பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள், 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களில்  ஒற்றை எண்ணில் மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள்.

இப்படி முக்கியமான பாடங்களில் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட மருத்துவப்படிபுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் என்று சிபிஎஸ்சி சொல்லும் பட்சத்தில், எப்படி மருத்துவ மாணவர்களின் சேர்க்கைகான நீட் தேர்வு நாட்டிலேயே தலை சிறந்த மருத்துவர்களை உருவாக்கமுடியும் என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி பணம் படைத்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் எளிதாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை தான் இன்னும் இருக்கிறது என்றால், தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க இது சரியான முறை இல்லை என்றால், ஏன் நீட் தேர்வை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வியும் கல்வியாளர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது. 

பரிட்சயமற்ற பாடத்திட்டம், தேர்வுக்கு பயிற்சி பெருவதில் சிக்கல், வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள், தேர்வரைக்கு செல்லும் முன் இருக்கும் கெடுபிடிகள், வினாத்தாள் கசிவு, வேற்று மொழியில் வினாத்தாள், வினாத்தாள் மொழிப்பெயர்க்கப்பட்டதிலும் குழப்பம், ஆன்லைனில் தேர்வு, ஆண்டுக்கு இரு முறை தேர்வு, தற்போது தனிப்பாட மதிப்பெண்களில் குழப்பம் என நீட் தேர்வை சுற்றிவரும் சர்ச்சைகளும் குழப்பங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இப்படியான குழப்பமான சூழலில் நீட் தேர்வில் தேவைப்பட்ட தகுதி மதிப்பெண்கள் எடுக்காததால் உயிர்விட்ட அனிதா, பிரதீப்பா போன்று இனி ஒரு உயிரை கூட நீட்டுக்காக யாரும் இழந்துவிடக்கூடாது என்ற குரல் மட்டுமே தற்போது ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.