செவ்வாய், 31 ஜூலை, 2018

வன்மங்களின் கூடாரமாகிறதா வலைதளங்கள்! July 31, 2018

Image

சமூகவலைதளங்களில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி கடந்த சில தினங்களாக வன்மங்களை கொட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். உண்மையில் இது போன்ற வக்கிரமங்கள் எப்படிப்பட்டது? திமுக தொண்டர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றிய முழு விவரம். 

இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி. உடல் நலிவுற்றுள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வலைதளங்களில் எழும் கருணாநிதிக்கு எதிரான சர்ச்சைகள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்பட்டாலும், அவரது மறைவை தமிழகத்தின் பேரிழப்பாகவே பார்த்தனர் அனைத்துக்கட்சி தொண்டர்களும்.

தற்போது கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவர் மீதான, ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகிறது ஒரு தரப்பு. தேசிய அளவில் தமிழகத்தை தலைநிமிர செய்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணாநிதி நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் மீது விமர்சனம் என்ற பெயரில் வக்கிரங்களை கொட்டி கொண்டிருக்கிறது ஒரு தரப்பு.

கருணாநிதியின் உடல்நலகுறைவை கொண்டாடுவது போன்ற பதிவுகளை ஒரு சாரார் பதிவிடத் தொடங்கினர். சமூகவலைதளங்களின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலகட்டத்தில், அது மனித உணர்வுகளை கொட்டும் இடமாகவே இருந்தது. ஆனால் இன்று அது வக்கிரங்களை கொட்டும் இடமாக மாறிவிட்டதா என எண்ண தோன்றுகிறது ஒரு சிலரின் செயல்கள். 

கருணாநிதி யாருக்கு எதிராக போராடினாரோ அவர்கள் விமர்சிப்பதை திமுகவினர் கண்டிப்பாக எதிர்பார்த்திருப்பார்கள் ஆனால் அவர் யாருக்காக திட்டங்களை கொண்டு வந்தாரோ அவர்களில் ஒரு கூட்டம் அதனை பணியாகவே செய்து வருகிறது. 

ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இது போன்ற விமர்சனங்களை செய்கிறார்கள் என்ற தகவல் பரவிய போது, அதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் சீமான். தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதியை பற்றி தவறான விமர்சனங்களை முன்வைப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் சீமான்.

ஆனாலும் வசவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதன் எதிரொலியாக நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்துள்ளது காவல்துறை

ஒரு புறம் கருணாநிதியின் புகழ்பாடும் பணிகளில் திமுகவினர் ஈடுபட்டாலும், மறுபுறம், இது போன்ற விமர்சனங்களால், எரிச்சலும் கோபமும் அடைந்துள்ளனர் திமுக தொண்டர்கள்

தனது வலைதளப்பக்கத்தில் வந்த விமர்சனங்களை கூட நீக்க வேண்டாம் என அட்மின்களுக்கு உத்தரவிட்டவர் கருணாநிதி. ஒரு வேளை தற்போது கருணாநிதி நினைவோடு இருந்திருந்தால், இது போன்ற விமர்சனங்களை எளிதாகவே கடந்திருப்பார் என்பது திமுக அபிமானிகளின் கருத்தாக இருக்கிறது உண்மையில் கருணாநிதி அவரது தொண்டர்களுக்கு கற்று கொடுத்திருக்கும் பாடமும் அதுதான்

source: 
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/31/7/2018/web-sites-are-tabernacle-hardships