மனிதனின் உடலில் முதல் முறையாக முப்பரிமான கலர் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டு நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதுவரையில் மனிதனின் உடலில் கருப்பு - வெள்ளை எக்ஸ்ரே பரிசோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது, இந்நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த CERN இயற்பியல் ஆய்வகமானது இமேஜிங் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டது.
CERN இயற்பியல் ஆய்வகம் சார்பாக நியூசிலாந்தைச் சேர்ந்த Canterbury மற்றும் otago பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வந்த விஞ்ஞானிகள் Phil மற்றும் Anthony Butler என்ற தந்தையும், மகனும் கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது Medipix3 என்ற தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
துகள்-கண்காணிப்பு தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலர் எக்ஸ்ரே இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் மிகவும் துல்லியமான, தெளிவான படங்கள் எடுக்க இயலும், இதன் மூலம் மருத்துவர்களால் நோய்த்தன்மையை மிகவும் துல்லியமாக கண்டறிய இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Medipix3 என்ற இந்த முப்பரிமான (3D) கலர் எக்ஸ்ரே இயந்திரம், கேமரா போன்று, தனி மற்றும் துணை அணு துகள்களை எண்ணிக்கை செய்து, அதை பிக்ஸல்களுடன் இணைக்கச் செய்கிறது, இதன் மூலம் அதிக ரெஸெல்யூஷன் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த படங்களை எடுக்க முடிகிறது.
கலர் எக்ஸ்ரே தொழில்நுட்பம் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக விளங்கி நோய்களை கண்டறிவதில் மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது நிதர்சனம்.