செவ்வாய், 31 ஜூலை, 2018

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை! July 31, 2018

Image

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையானது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குறவன் மற்றும் குறத்தி என்ற 2 மலைகளை இணைத்து ஒரு அரைவட்டம் போல பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணையானது, ஆசியாவில் உள்ள வளைவு அணைகளில் மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமானதாகும். 

கேரள மின்வாரியத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற அணைகளின் ஆயுள்காலம் 100 ஆண்டுகளாக உள்ள நிலையில், இடுக்கி அணையின் ஆயுள்காலம் மட்டும் 300 ஆண்டுகளாக விளங்குகிறது. கடந்த 1969ஆம் ஆண்டில் இந்த அணையின் கட்டுமான பணிகள்  தொடங்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு வரை 4 நான்கு ஆண்டுகள் பணிகள் நடைபெற்றன.

மதகுகள் இன்றி இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து 1981-ம் மற்றும் 1992-ம்  ஆகிய இரு ஆண்டுகள் மட்டுமே அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 26  ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை மீண்டும் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் இடுக்கி அணை முதன்முறையாக நிரம்பவுள்ளது. இதனால், எந்நேரமும் இடுக்கி அணை   திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இடுக்கி அணை பகுதியில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்காக செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகள் உள்ளன. இதில், இடுக்கி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செருதோனி அணைக்கு செல்கிறது. அங்கிருந்து தான் 5 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும். முதல்கட்டமாக, 40 சென்டி மீட்டர் அளவுக்கு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் பெரியாறு  
ஆற்றில் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது, அலுவா உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் முன்னெச்சரிக்கை  பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டும் செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அணை நீர்மட்டம் 2400 அடியை எட்டும்போது, தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இடுக்கி அணை திறக்கப்படுவதை ஒட்டி முப்படைகளின் உதவியையும் கேரள அரசு கோரியுள்ளது. இந்திய கடலோரக் காவல் படையினரின் படகுகள், விமானப்படையின் இரு ஹெலிகாப்டர்கள்  உள்ளிட்டவை மீட்புப்பணிக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 395 அடியை எட்டிய நிலையில் கரையோர மக்களுக்கு ஆரஞ்ச் வெள்ள அபாய எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது, நீர்மட்டம் 2 ஆயிரத்து 397 அடியை எட்டும்போது, குறிப்பிட்ட நேரங்களுக்கு ஒருமுறை அணையில் இருந்து தண்ணீர்  திறக்கப்படும் எனவும், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப தண்ணீரை திறக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.