சனி, 14 ஜூலை, 2018

​ட்விட்டரின் அதிரடி ஆக்‌ஷனால் பிரபலங்கள் அதிர்ச்சி..! July 14, 2018


ஒருவருடைய சமூக வலைதளங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்தே அவரது அரசியல் செல்வாக்கை தூக்கிப் பிடிக்கும் காலம் இது. இதற்கு டிவிட்டர் தனது அதிரடி ஆக்சன் மூலம் இப்போது செக் வைத்திருக்கிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி இந்திய பிரதமர் மோடி ,ராகுல் காந்தி ,விராட் கோலி என அனைத்து பிரபலங்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள் .

பேஸ்புக், டிவிட்டர் , இன்ஸ்டாகிராம் என  நாளுக்கு நாள சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்று அதன் மீதான நம்பிக்கை சார்ந்த கேள்விகளும் அதிகளவில் எழுந்துள்ளன. போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில்  பரப்பப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் இதனை எதிர்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. இதில் டிவிட்டர் தனது பயனாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த போலி கணக்குகளை முடக்கும் வேலையில் முழு மூச்சாக இறங்கி உள்ளது. 

போலி கணக்குகளை முடக்கும் வேலையை டிவிட்டர் செய்வதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா ஆகியோரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் முதல் 4 லட்சம் வரை குறைந்துள்ளது.  துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் , பிரபல பாப் பாடகி கேட்டி பெரி, ஜோர்டான் இளவரசி ராணியா என பல துறையை சேர்ந்த பல சர்வதேச  பிரபலங்களின் பெயரில் உள்ள போலி ட்விட்டர் ஐடிக்கள் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை அரசியல் பிரபலங்களை பின்தொடர்ந்து வந்தவை.

குறைவான லாக் இன் செய்தவை, 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் டிவிட்டர் கணக்குகள் தான் இதற்கு முதல் டார்கட். இத்தகைய அக்கவுண்டுகளை கண்காணித்து அவை உண்மையானதா போலியா என்று கண்டுபிடித்து முடக்குகிறது டிவிட்டர் நிறுவனம். இதனால் தற்போது ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பெரியஅளவில் குறைய வாய்ப்புள்ளது. டிவிட்டரின் இந்த அதிர்ச்சி வைத்தியம் இந்திய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர்கள் , திரைபிரபலங்கள் என இவர்களுடைய டிவிட்டர் கணக்குகளிலும் வெகு விரைவில் ஃபாலோயர்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்  என்று கூறப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியினைப் பின் தொடரும் லட்சக்கணக்கான கணக்குகள் போலியானவை. இதே போல பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ட்விட்டர் பாலோயர்கள் கணக்குகள் 20 சதவீதத்திற்கு மேல் போலியானவை என  கண்டறியப்பட்டுள்ளது. தற்போது டிவிட்டர் பயன்படுத்துவோரிண் எண்ணிக்கை 33 கோடியாக உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் டிவிட்டர் பயனாளிகளின் எண்ணிக்கை குறையலாம். இருப்பினும் டிவிட்டர் நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைதன்மை மக்களிடம் ஏற்பட்டு செல்வாக்கை பெற்று தரும் என்கிறார் டிவிட்டர் தலைமை நிதி அலுவலர் நெட் சீகல். இதனால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். தாங்களே போலி கணக்குகளை உருவாக்கி சமுக வலைதளத்தில் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்தியவர்கள், இதற்காக ஆட்களை நியமித்து வேலை செய்த அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் சீட்டு கட்டுப் போல் சரிவதால் சங்கடத்தில் இருக்கிறார்கள் பிரபலங்கள். 

ட்விட்டர், பிரபலங்கள், சமூக வலைதளம், பின்தொடர்பவர்கள்