செவ்வாய், 24 ஜூலை, 2018

தென் மாவட்ட மக்களின் கலங்கரை விளக்காக விளங்கும் மதுரை உயர்நீதிமன்றம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது! July 24, 2018

Image

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை துவங்கப்பட்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழக வரலாற்றில் பல்வேறு முக்கியத்துவமான தீர்ப்புகளை வழங்கி, சமூக நீதியை காத்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.  

வழக்குகளுக்காக தென் தமிழக மக்கள் அலைச்சலுக்குள்ளாவதை  தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தொடங்கப்பட்டது தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை... 

கீழமை நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனில் தென் மாவட்ட மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், தென் தமிழக மக்கள், அலைக்கழிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக தென் தமிழகத்தை மையமாக வைத்து உயர்நீதிமன்ற கிளையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, கடந்த 2000ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அடிக்கல் நாட்டினார். 

சமூக நீதியைக் காக்கவும், மக்களை வதைக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதியான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி முக்கியமான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியது. 

அதே போல், மதுரையின் முக்கிய அடையாளமான யானை மலையில், கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதைத் தடுத்தி நிறுத்தியுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது 7 பேருக்கு கண்பார்வை இழந்த விவகாரத்தில் நீதியை நிலை நாட்டியதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைதான். 

கருவேல மரங்களை முற்றிலும் அகற்றவும், அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை ஏற்படுத்தவும் வழிவகுத்தது. கீழடியில் தொல்லியல் துறை ஆய்வை தொடர வழிவகை செய்தது, ஜல்லிக்கட்டு , நீட் தேர்வு என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வழக்குகளில் முன்மாதிரியான தீர்ப்புகளை வழங்கியது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையால் விளைந்த பலன்களின் பட்டியல் மிக நீண்டது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  நீதிமன்ற பதிவாளரை தலைமையாக கொண்டு செயல்படும் சட்ட பணிகள் ஆணையக்குழுவில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் ஏழைகளுக்கு இலவசமாக வழக்குகள் நடத்தி கொடுக்கப்படுகின்றன. மேலும் ஆணையக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 

பல்வேறு வழக்குகளில் உன்னதமான தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டி வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தென் மாவட்ட மக்களுக்கு அமைந்த வரப்பிரசாதங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது.