லண்டனில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவர் எனக் கூறி திருமண வலைத்தளத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாகிஸ்தானியர் ஒருவர் ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டலில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார், இவருக்கு மேட்ரிமோனி வலைத்தளத்தில் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்துள்ளனர்.
அண்மையில் அப்பெண்ணின் மேட்ரிமோனி பக்கத்திற்கு, ஒரு நபர் விண்ணப்பம் (Request) செய்தார். அவர் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும், லண்டனில் மருத்துவராக பணியாற்றிவருவதாகவும் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார்.
லண்டனில் பணிபுரிந்து வரும் அவர் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அப்பெணிடம் கூறியுள்ளார்.
அப்பெண்ணிற்கு பிடித்தவை, பொழுதுபோக்கு பற்றியெல்லாம் அவர் கேட்டுள்ளார், ஆனால் பதிலுக்கு அந்த நபர் குறித்த விவரங்களை கேட்டபோது அவர் மழுப்பலாகவும், திணறியும் பதிலளித்துள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த அப்பெண் லண்டனில் அவர் பணியாற்றுவதாகக் கூறிய மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி ஒரு நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்று பதில் கூறியுள்ளனர்.
பின்னர் அந்த நபர் அனுப்பிய புகைப்படங்கள், ஐடி கார்டு உள்ளிட்டவைகளை சோதனை செய்து பார்த்த போது ஒரு புகைப்படத்தில் ஸ்டூடியோ ஒன்றின் தொலைபேசி எண் இருந்துள்ளது.
உடனடியாக அந்த எண்ணுக்கு அழைத்த போது, எதிர்முனையில் பேசியவர் ஒரு பாகிஸ்தானி என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் அப்பெண். மேலும் தனக்கு மேட்ரிமோனி தளத்தில் பேசி வந்த நபர் அவரின் நண்பர் என்பதும், அவருக்கு முன்னதாகவே திருமணம் நடந்து 3 குழந்தைகள் இருப்பதும் தெரிந்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் ஒரு பாகிஸ்தானி நபரால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த அப்பெண் அந்த நபரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இதனை அறிந்த அந்த நபர் அப்பெண்ணிற்கு தொடர்பு கொண்டு அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையின் வெர்சோவா காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேட்ரிமோனி தளங்களில் இது போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளது என்பது இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது