திங்கள், 30 ஜூலை, 2018

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? July 30, 2018

Image

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கடந்த 1953 ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 64 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த காலக் கட்டத்தில் வெள்ளத்தால்,  2 லட்சத்து 2 ஆயிரத்து 474 கோடி ரூபாய் அளவிற்கு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

25 புள்ளி 6 கோடி ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 202 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள், வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,654 பேரும், 92 ஆயிரத்து 763 கால்நடைகளும் உயிரிழந்தாக, மத்திய  நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1953-ம் ஆண்டிற்கும் 2017ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 64 ஆண்டுகளில் அதிகபட்சமாக 1977-ம் ஆண்டு 11 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்துள்ளனர்.  

1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி, நாடெங்கிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.