கேரள போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குமரி மாவட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
போதை பொருட்கள் கடத்தல் வழக்கில், விசாரணை என்ற பெயரில் களியக்காவிளை எல்லை பகுதியில் வசிக்கும் இளைஞர்களை கேரள போலீசார் பிடித்து செல்வது அண்மையில் அதிகரித்து வருகிறது. கடந்த 23ம் தேதி, கஞ்சா கடத்தல் தொடர்பாக, அனீஸ் மற்றும் அவரது நண்பர் சாமுவேலை பிடித்து சென்ற கேரள போலீசார், நடுவழியில் சாமுவேலை மட்டும் விடுவித்து சென்றனர்.
இளைஞர் அனீஸை பிடித்து சென்றது குறித்து, கேரள போலீசாரிடம் விசாரித்த போது, அவரை விடுவிக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் சகோதரர் பிரேம் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 22ம் தேதி அத்துமீறி தமிழக எல்லையில் சாதாரண உடையில் வந்த கேரள போலீசாரை, அனீஸ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் அனீஸை பிடித்து சென்று விசாரணை என்ற பெயரில் தாக்கி கொன்று விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில் விசாரணை கைதியை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற வழக்கில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியதை சுட்டிக் காட்டிய வழக்கறிஞர் மதனகுமார், இதே போல், அனீஸ் உயிரிழந்த சம்பவத்தில் தண்டனை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கேரள மாநில போலீசாரின் அத்துமீறல் சம்பவங்கள் கன்னியாகுமரி எல்லை பகுதியில் தொடர்வதை, தமிழக அரசு இனியாவது தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.