வெள்ளி, 20 ஜூலை, 2018

பாலியல் வன்புணர்வும் உளவியலும்...! July 20, 2018

Image


சென்னையைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிக்கு பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், பாலியல் குற்றவாளிகளின் மனநிலையில் இருந்து இப்பிரச்னையை அணுக வேண்டியதன் அவசியத்தையும் புறம் தள்ளிவிட முடியாது. தண்டனைகளை கடுமையாக்கினால், இதுபோன்ற சம்பங்கள் குறையுமா என்ற கேள்வியும் எழுகிறது. 

ஏன் இந்தியா 'செக்ஸை' பற்றி வெளிப்படையாக பேச மறுக்கிறது? ஆனால் கொடூர பாலியல் வன்புணர்வுகளாக இதே செக்ஸ் சமூகத்தில் தவறான வழியில் வெளிப்படும் போது வெகுண்டெழுகிறது? இந்த தொடர் முரணின் விளைவுதான், தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கான காரணமா? இந்த கேள்விகளுக்கான விடையை தேடுகிறது இந்த செய்தி தொகுப்பு. 

ஒவ்வொரு முறையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும், தீவிர வன்கொடுமைக்கும் ஆளாகும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உருதுணையாக நாம் இருக்க மறப்பதுமில்லை, மறுப்பதுமில்லை ஆனால் அதே நேரம் இந்த கொடுமைகளை இழைக்கும் ஆண்களின் உளவியலை ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பாலியல் குற்றவாளிகள் சார்ந்து ஃப்லோரிடா அட்லாண்டிக் பல்கலைகழகம் வெளியிட்ட பல ஆய்வறிக்கைகளில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்களை 5 விதமாக பிரிக்கிறார்கள். முதலாவதாக, சமூக, பொருளாதார மற்றும் பாலுணர்வு குறைப்பாட்டால் விரக்தியடைந்தவர்கள்  இது போன்ற வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், இரண்டாவது, இருவரின் சம்மதத்தோடு நடக்க வேண்டிய பாலியல் உறவை விரும்பாமல், பெண்களை வற்புருத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, அந்த பெண்ணின் வலியில் சுகம் காண்பது, மூன்றாவதாக, பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி, அவர்கள் தாக்கப்படத்தக்க இரையாக இருக்கிறார்களா என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது, தீவிர பாலுணர்வு கிளர்ச்சிக்காக பெண்களை பயன்படுத்திக்கொள்வது, கேசுவல் செக்ஸ் என இதில் பல வகைகள் உண்டு. 

இந்நேரத்தில் இந்தியாவில் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வி, சமூக பொருளாதார காரணிகள் நடுத்தர மக்களின் பாலுணர்வு வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைத்தான். பாலியல் உறவுக்கான நோக்கத்தின் அளவுகோளை (பாலியல் உறவில் அடையும் திருப்தியை) இந்த காரணிகள் தீர்மானிக்கின்றன என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பாலியல் குற்றவாளிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர். நிர்பயா, கத்துவா சம்பவம், அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என நட்டையே உலுக்கிய கொடூர சம்பவஙகளில் இருந்த ராம் சிங் முதல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவிக்குமார் வரை அனைவருமே சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றனர். லாரி ஓட்டுநர், ஓட்டுநர் உதவியாளர், பழம் விற்பவர், லிஃப்ட் ஆப்ரேட்டர், பிளம்பர், செகியுரிட்டி, ஹவுஸ் கீப்பிங் போன்ற தொழிலையே செய்பவர்களாக இருக்கின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் குற்றக்காரணிகளின் 100 சதவீதத்தில், காம இச்சைகளையும் தாண்டி, இது போன்ற காரணிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 

குற்றவாளிகள் அவர்களின் சொந்த வாழ்வில் பாலியல் ரீதியாக திருப்தியடையவில்லையா? அவர்களின் கடந்த கால வாழ்வின் மோசமான பக்கங்கள் அவர்களுக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தை, பெண்கள் மீது பாலியல் அதிகாரமாக செலுத்துகிறார்களா? அதன் உச்சம் தான் இத்தகைய கொடூர பாலியல் குற்றங்களா? ஒருவரின் பாலியல் குணாதீசியங்கள் பிரச்னைக்குரியதாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறதா ?இவ்வளவு காரணிகள் இருக்கும் பட்சத்தில் தண்டனைகளை மட்டும் தீவிரப்படுத்தினால் இதற்கு தீர்வு கிடைத்துவிடுமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

வன்புனர்வுக்கு ஆளாக்கபடும் சிறுமிகளின் வலிக்கு முன் இவை அனைத்தும் துச்சம் என நினைத்தாலும்,  நம் சமூகத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டிய பாலுணர்வு சமத்துவத்துக்கும், பாலியல் குற்றங்களை அடியோடு களைந்தெரிய வேண்டிய தேவைக்கும் இவை நிச்சயமாக அடித்தளமாக அமையும்.