ஈரோடு அருகே, மாவட்ட நிர்வாகம் கால்நடை மருத்துவமனை அமைக்க காலதாமதம் செய்ததால், கிராம மக்களே நிதி திரட்டி கால்நடை மருத்துவமனை அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்துள்ள, இந்த சிறுக்களஞ்சி கிராமத்தில், பெரும்பாலான குடும்பங்களுக்கு விவசாயம் தான் பிரதானத் தொழில். இவ்வூரைச் சேர்ந்த விவசாயிகள், வீடுகளில் மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருவதுடன், ஆடு கோழிகளையும் வளர்ந்து வருகின்றனர். சிறுக்களஞ்சி கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த, அரசு கால்நடை மருத்துவமனை, கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து செயல்படாமல் போனது. இதனால், சிறுக்களஞ்சி பகுதியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு, கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், மற்றும் கருவுற்ற பசு மாடுகளை, மருத்துவமனைக்கு தொடர்ந்து அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், கிராம மக்களே தங்களது வசதிக்கு ஏற்ப, தலா 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நிதி திரட்டி, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில், கால்நடை மருத்துவமனையை கட்டினர். தற்போது இந்த கட்டிடத்தில் தான், அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
அரசின் உதவியை எதிர்பார்க்காமல், கிராம மக்களே தங்களது சொந்த செலவில், கால்நடை மருத்துவமனை கட்டி திறந்துள்ளதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.