வியாழன், 26 ஜூலை, 2018

விசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: உயர்நீதிமன்றம் July 26, 2018




Image



ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், புதிய தலைமை செயலகம் கட்டியதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, திமுக தலைவர் கருணாநிதிக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது, பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக நீதிபதி சுப்ரமணியம் கூறினார். வெறும் கண்துடைப்புக்காவே இதுபோன்ற விசாரணை ஆணையத்தை, அரசு அமைத்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். 

மறந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் நடைபெற்று வரும் நிலையில் நீதிபதி இவ்வாறு கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/26/7/2018/public-has-lost-confidence-inquiry-commission-high-court


source: News 7 tv