ஞாயிறு, 29 ஜூலை, 2018

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்! July 29, 2018

Image

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ட்விட்டர் கணக்கில் தன் ஆதார் எண்ணை பதிவிட்டு இதன்மூலம் தனக்கு யாராவது தீங்கு விளைவிக்க முடியுமா என்பது போல சவால் விட்டிருந்தார்.

அவர், பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹேக்கர் எல்லியட் ஆல்டெர்சன் என்ற நபர், ஆர்.எஸ். ஷர்மாவின் சொந்த விவரங்களான அவரது தொலைபேசி எண், வாட்ஸ் அப்பில் அவர் வைத்திருந்த புகைப்படம், சிலருடன் chat செய்த தகவல், வீட்டு முகவரி, PAN எண் போன்றவற்றை பதிவு செய்தார். ஆர்.எஸ் ஷர்மா தனது G-Mail Password-ஐ மாற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து பல்வேறு நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், ஷர்மாவின் சொந்த தகவல்களை கண்டுபிடித்து, அதனை பதிவு செய்திருந்தனர். ஆதார் எண்ணை பயன்படுத்தி, ஒருவரது தகவல்களை எளிதில் எடுத்துவிடலாம் என்பதற்கு சான்றாக இந்த ட்விட்டர் கருத்து பதிவேற்றம் இருக்கிறது என்று இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை:

இந்நிலையில் ஆர்.எஸ் ஷர்மாவின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதில் உண்மை இல்லை என்றும், அவை அனைத்தும் இணையத்தில் எளிதில் கிடைக்க கூடிய தகவல்களே என்றும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகப்பாக உள்ளதாகவும் அவை ஹேக் செய்யப்படவில்லை என்றும் உறுதியளித்தார்.

ஆர்.எஸ் ஷர்மாவின் ஆதார் கனக்கு விவரங்களை ஹேக் செய்ததாக கூறிக்கொள்ளும் எல்லியட் ஆல்டெர்சன், பிரதமர் மோடியை தனது ஆதார் நம்பரை வெளியிடும் படி ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




source:
http://ns7.tv/ta/tamil-news/india/29/7/2018/hacker-asks-pm-modi-aadhar-number