வியாழன், 19 ஜூலை, 2018

ஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்ட பெண் விமானி காவ்யா! July 19, 2018



Image


மதுரையில் இருந்து ஒரு பெண் தடைகளை உடைத்து உலகம் முழுவதும் பறக்க போகிறார். பெண் விமானியாக உரிமம் பெற்றுள்ள காவ்யா பெண், ஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்ட கதை.

ஒரு காலத்தில், வானில் விமானம் பறப்பதை கண்டால், கிராம பகுதியில் உள்ளவர்கள், அதனை அண்ணாந்து பார்த்து கூச்சலிடுவர். அந்த நிலை மாறி, தற்போது, ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் விமானத்தை இயக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்துறைக்குள் பெண்கள் நுழைவது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், தனது திறமையால் அதனை முறியடித்து, பெண் விமானியாக உரிமம் பெற்று சாதனை படைத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த காவ்யா.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த காவ்யாவின் தந்தை, பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை தனக்குள் விதைத்துக் கொண்ட காவ்யா, பெங்களூருவில் உள்ள அரசு விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தபோது பலரும் எள்ளி நகையாடியுள்ளனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த காவ்யா, முதல்நிலை மாணவியாக தேர்வு பெற்றுள்ளார்.


1997ம் ஆண்டு மூடப்பட்ட ஜக்கூர் விமான பயிற்சி பள்ளியில் கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் முதல் பேட்ஜில் இணைந்த காவ்யா, மத்திய அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் உதவி தொகையால் தம்மால் படிப்பிலும், பயிற்சியிலும் கவனம் செலுத்த முடிந்ததாக கூறுகிறார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து உரிமம் பெற்ற பிறகு, மதுரை விமானம் நிலையம் வந்த காவ்யாவுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.


இந்த பயிற்சியில் சேர்வதற்கு தனது பெற்றோர் அனுபவித்த கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று கூறும் காவ்யா, இந்த வெற்றி தன்னுடைய பெற்றோருக்கு சொந்தமானது என கூறுகிறார்.

தன்னை போன்று பிற குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளையாவது நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறுகிறார் காவ்யா. கடின இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காவ்யா ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை.